internet

img

கணினிக்கதிர் : காணாமல் போன மொபைலை கண்டுபிடிக்க அரசு இணையதளம்

மொபைல் திருட்டு போவது அல்லது அறியாமல் தவறவிடுவதால் பொருள் இழப்பு மட்டுமல்ல தகவல் இழப்பும் மிகப்பெரிய அளவில் நம்மை பாதிக்கிறது. மொபைல் போன்களில்தான் பலரும் தங்களுடைய பல தனிப்பட்ட ஆவணங்கள், படங்கள், நிகழ்ச்சிக் குறிப்புகள் எனப் பலவற்றையும் பதிந்துவைத்திருக்கின்றனர். இத்தகைய தகவல்களை பதிந்து வைத்திருக்கும் பயனர்கள் மொபைலை இழக்கும்போது என்ன செய்வது¬? எங்கு முறையிடுவது? கிடைக்குமா¬? என்ற குழப்பத்தைத் தொடர்ந்து ஏற்படும் பதற்றம், மன உளைச்சலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், திட்டம் ஒன்றை 2012ல் தொலைத் தொடர்புத் துறை தீட்டியது. மொபைல் போன் திருடப்பட்டு விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ அதை கண்டுபிடித்து தர  Central Equipment Identity Register சுருக்கமாக CEIR என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மொபைல்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு இத்திட்டம் இறுதியாக தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொபைல் திருட்டு குறித்து புகார் தெரிவிக்க இணையதளம் ஒன்றை தொலைத் தொடர்புத் துறை தற்போது தொடங்கியுள்ளது. https://www.ceir.gov.in என்ற இத்தளத்தில் காணாமல் போன உங்கள் மொபைல் போன் IMEI எண் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். நீங்கள் வாங்கிய மொபைல் ஒரிஜினல் IMEI எண் கொண்டதா? திருடப்பட்ட புகார் தெரிவிக்கப்பட்ட மொபைலா? போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

ஐ.எம்.ஈ.ஐ. எண்
அனைத்து மொபைல் போன்களுக்கும் IMEI என்று சொல்லப்படும் தனித்துவமான எண் இருக்கும். உங்கள் மொபைலின் IMEI எண் அறிய *#06# என்பதை டயல் செய்து பெறலாம். அந்த எண் மூலம்தான் மொபைல் போன் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில் IMEI எண் நகல் செய்யமுடியும் என்பதால், இதன் காரணமாக ஒரே IMEI எண் கொண்ட பல போன்கள் இருக்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு IMEI எண்ணை ப்ளாக் (Block) செய்தால், பலர் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்கும் நோக்கில்தான் CEIR திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், “ஒரு மொபைல் போன் தொலைந்துவிட்டால் அதை ப்ளாக் செய்ய இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும். அதேபோல போலி ஐ.எம்.ஈ.ஐ எண்கள் உருவாவதையும் இந்தத் திட்டம் மூலம் தடுக்க முடியும். திருடிய மொபைல் போன்களை பயன்படுத்துவது இதன் மூலம் தடுக்கப்படும்” என்று திட்டத்தின் நன்மைகளை விளக்கிக் கூறியுள்ளது.

புகார் தெரிவிப்பது எப்படி?
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால், முதலில் காவல் துறையிடம் சென்று எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தொலைத்தொடர்புத் துறைக்கு 14422 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் புகாரைத் தொடர்ந்து, அரசு தரப்பிலிருந்து சில சோதனைகள் செய்யப்படும் . அதன் பின்னர் போன் ப்ளாக் செய்யப்படும். யாராவது உங்கள் மொபைல் போனை, புதிய சிம் கார்டு போட்டுப் பயன்படுத்தினால், அந்த சிம் கார்டு சேவை வழங்கும் நிறுவனம் போலீஸிடம் பயனர் குறித்து தகவலைப் பகிர்ந்து கொள்ளும். இதன் மூலம் மொபைலின் இருப்பிடம் குறித்த தகவல் கண்டறியப்படும். காணாமல் போன மொபைல் திரும்பக் கிடைத்துவிடும் பட்சத்தில் பிளாக் செய்யப்பட்டதை நீக்கும் வழிமுறையும் இத்தளத்தில் உள்ளது. புகார் தெரிவித்த பிறகு புகாரின் நிலை குறித்து (Status) புகார் எண் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். 

இதே சேவையைப் பெற ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. KYM - Know Your Mobile என்ற இச்செயலி மற்றும் இணையதளத்தைப் பயன்படுத்தி தற்போது மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் மட்டும் புகார் தெரிவிக்கலாம். மற்ற மாநிலத்தவர்கள்  ஐ.எம்.ஈ.ஐ. எண் தொடர்பான விபரங்களை மட்டுமே அறிந்து கொள்ளலாம். விரைவில் நாடுமுழுவதும் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.

===என்.ராஜேந்திரன்===

;